search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக தேர்தல்"

    • முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்வை சந்தித்து பேசினார்.
    • முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்ற கருத்து டிகே சிவக்குமாரிடம் கேட்கப்பட்டதாக தகவல்.

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மாநிலத்தில் ஆட்சியமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வரை காங்கிரஸ் கட்சி மேலிடம் தேர்வு செய்யும் என்று கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று டெல்லி சென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்வை சந்தித்து பேசினார். இவரைத் தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இன்று (மே 16) டெல்லி புறப்பட்டு சென்றார்.

    இன்று மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை டிகே சிவக்குமார் சந்தித்து பேசினார். இருவரின் பேச்சுவார்த்தையின் போது, கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்று அவரிடம் யாரும் தெரவிக்கவில்லை என்றும், அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்ற கருத்து டிகே சிவக்குமாரிடம் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    'எனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்றால், நான் சாதாரண சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்ற தயார். சித்தராமையா கட்சியில் இணைந்தது முதல், ஒன்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அல்லது முதலமைச்சர் என்று அதிகாரத்திலேயே இருந்து வந்துள்ளார்,' என்று டிகே சிவக்குமார் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    • கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் டெல்லி செல்ல இருந்தார்.
    • என்னிடம் எந்த சட்டமன்ற உறுப்பினரும் இல்லை. கட்சி மேலிடமே முடிவை எடுக்கட்டும்.

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளது. அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக நேற்று மாலை காங்கிரஸ் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று சித்தராமையா டெல்லி சென்றுள்ளார். இவரைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் டெல்லி செல்ல இருந்தார். இந்த நிலையில், டெல்லி பயணத்தை ரத்து செய்த டிகே சிவகுமார் விமான நிலையம் செல்லாமல் வீடு திரும்பினார்.

    இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் இன்று டெல்லி செல்லவில்லை. மொத்தம் 135 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். என்னிடம் எந்த சட்டமன்ற உறுப்பினரும் இல்லை," என்று டிகே சிவகுமார் தெரிவித்தார்.

    "நான் போர்க்கொடி தூக்கவில்லை. யாரையும் மிரட்டவில்லை. முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடத்திடம் விட்டுவிட்டேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்கு எனது வாழ்த்துகள்," என்று அவர் மேலும் தெரிவித்தார். 

    டெல்லி பயணத்தை ரத்து செய்ததோடு, சித்தராமையாவுக்கு டிகே சிவகுமார் வாழ்த்து தெரிவித்து இருப்பதால் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநில முதல்வரை கட்சி மேலிடம் தேர்வு செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

     

    இந்த நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 135 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சுயேட்சையாக வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சட்டமன்ற கூட்டம் காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே, பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொது செயலாளர் தீபக் பபாரியா ஆகியோர் பார்வையாளர்களாக செயல்பட்டனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் முதல்வரை கட்சி மேலிடம் தேர்வு செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 

    • முதல்வர் பதவியை பெற சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவுகிறது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் கருத்தை கேட்டறிந்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்பிக்க குழு உருவாக்கம்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அம்மாநிலத்தில் முதல்வர் பதவியை பெற சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவுகிறது.

    இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் கருத்தை கேட்டறிந்து கட்சி தலைமைக்கு அறிக்கையாக சமர்பிக்க மூன்று பேர் அடங்கிய பார்வையாளர்கள் குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். தற்போது வரை எல்லாமே சரியாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஆட்சியமைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    "யார் வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லை என்பதை கடந்து மாநில மக்களுக்கு சேவையாற்றுவதே எங்களின் குறிக்கோள். கர்நாடக மக்கள் பாஜக-வை நிராகரித்துள்ளனர். மக்கள் பணவீக்கம், வேலையின்மை மற்றும் ஊழல் போன்ற பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது," என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை கேட்டறிந்து அறிக்கை சமர்பிக்க பார்வையாளர்கள் அறிவிப்பு.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றிய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை கேட்டறிந்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்பிக்க மூன்று பேர் அடங்கிய பார்வையாளர்கள் குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    இதுபற்றிய அறிவிப்பில், மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொது செயலாளர் தீபக் பபாரியா ஆகியோர் சட்டமன்ற கூட்டத்திற்கு பார்வையாளர்களாக செயல்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய அரசை அமைப்பது, அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி விவாதிக்கப்படுகிறது.

    முதல்வர் பதவி யாருக்கு என்ற விஷயத்தில் கடந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநிலத்துக்கான காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் ஆகியோர் தங்களுக்கு ஆதரவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர். 

    • மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு மே 10 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி.
    • எதிர்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் முதல்வர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் ஆகியோருக்கு முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் யார் என்பது பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது. எதிர்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் முதல்வர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

     

    "இருவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அரசாங்கத்தை அமைத்து, அமைச்சரவை கூட்டத்தை நடத்தட்டும். அவர்களது முடிவுகளை அறிவிக்கட்டும். பொருத்திருந்து பார்ப்போம்," என்று பசுவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

    மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு மே 10 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக கட்சி 66 இடங்களையும், ஜனதா தளம் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் தோல்யுற்றதை அடுத்த பசுவராஜ் பொம்மை நேற்று (மே 13) தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

    • கர்நாடக சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது.
    • பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என முதல் மந்திரி தெரிவித்தார்.

    பெங்களூரு:

    முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

    கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். எங்கள் கட்சிக்கு அனைவரின் ஆசிர்வாதமும் உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைவது உறுதி. சித்தராமையா, டி.கே.சிவகுமாரின் தொலைக்காட்சி பேட்டியை பார்த்தேன். காங்கிரசில் எதுவும் சரியாக இல்லை என்பது தெரிகிறது.

    மக்களுக்கு ஒற்றுமையாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் முயற்சி செய்துள்ளனர். இது போன்ற நாடகம் பா.ஜ.க.வில் நடக்காது. ஏனெனில் எங்கள் கட்சியில் ஒற்றுமை உள்ளது. எங்களுக்கு மக்களின் ஆதரவும் உள்ளது.

    மக்களின் பிரச்சினைகளை அறிந்து செயல்படுவது என்பது மிக முக்கியமானது. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்கிறேன். சிக்காவி தொகுதியில் எனது குடும்பத்தினருடன் வாக்களிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

    • பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் வாகனத்தில் சென்றபடி பிரசாரம் செய்தார்.
    • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பான பிரசாரம் செய்து வருகின்றன. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இரு கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் வாகனத்தில் சென்றபடி பிரசாரம் செய்தார். பிரதமர் வாகன பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியதோடு, அவருக்கு ஆரவாரமான வரவேற்பை அளித்தனர். பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது..,

     

    "இதுபோன்ற அன்பை இதுவரை எங்கும் பார்த்ததில்லை. பெங்களூருவில் கிடைத்த வரவேற்புக்கு இணையில்லை. இன்று காலை நான் பொது மக்கள் தரிசனத்தை பெங்களூருவில் பெற்றேன். பெங்களூருவில் நான் பார்த்ததை வைத்து ஒன்றை தெரிந்து கொண்டேன்."

    "இந்த தேர்தலில் மோடியோ அல்லது பாஜக தலைவர்களோ அல்லது நம் வேட்பாளர்களோ போட்டியிடவில்லை. மாறாக இங்கு கர்நாடக மக்கள் தான் பாஜக வெற்றிக்காக போட்டியிடுகின்றனர். ஒட்டுமொத்த தேர்தல் கட்டுப்பாடு முழுமையாக மக்கள் கையில் இருப்பதை என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது."

    "இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக பாகல்கோட் மக்களுக்கு மூன்று லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பகல்கோட்டை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்தமாக கான்கிரீட் வீடு பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்ட பலன்கள் பாகல்கோட் மக்களுக்கு சென்றடைந்துள்ளது," என்று தெரிவித்து இருக்கிறார். 

    • அது எப்படி பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று காங்கிரஸ் கூற முடியும்?
    • வெறுப்பு கருத்து பரப்பும் தனிநபர் மற்றும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மூத்த பாஜக தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைத்தால் பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்ததை அடுத்து கேஎஸ் ஈஸ்வரப்பா இவ்வாறு செய்தார்.

    பஜ்ரங் தள் கட்சியை தேசப்பற்று கொண்ட அமைப்பு ஆகும், அது எப்படி பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று காங்கிரஸ் கூற முடியும்? என்று கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கேஎஸ் ஈஸ்வரப்பா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தல் அறிக்கையில் பொது மக்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிராக மதம் மற்றும் சாதி அடிப்படையில் வெறுப்பு கருத்து பரப்பும் தனிநபர் மற்றும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

     

    "சட்டம் மற்றும் அரசியலமைப்பை புனிதமான ஒன்றாக நாங்கள் கருதுகிறோம். பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் பஜ்ரங் தளம், பிஎஃப்ஐ போன்ற அமைப்புகள் மீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சட்டத்தின் படி இதுபோன்ற அமைப்புகளை தடை செய்வது உள்பட கடுமையான நடவடிக்கை எடுப்பபோம், " என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேஎஸ் ஈஸ்வரப்பா அது முஸ்லீம் லீக் தேர்தல் அறிக்கை என்று குறிப்பிட்டார்.

    "ஒட்டுமொத்த ஒக்கலிகா சமூகமும் தனக்கு ஆதரவாக உள்ளது, இதனால் நான் தான் முதல்வராவேன் என்று டாக்டர் கே சிவகுமார் கூறுகிறார். பிற்படுத்தப்பட்டோர் சமூகம் தனக்கு ஆதவராக இருப்பதால், நான் முதல்வர் ஆவேன் என்று சித்தராமையா கூறுகிறார். இதில் இருந்தே இரு தலைவர்களும் சமூகங்கள் இடையே மோதலை ஏற்படுத்த திட்டமிடுவது அப்பட்டமாக தெரிகிறது," என்று கேஎஸ் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

    • ஒரேநாளில் கர்நாடகத்தில் 11,461 பேர் வீட்டில் இருந்த படியே வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருந்தனர்.
    • வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் மகாதேவ மகாலிங்க மாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாட்டிலேயே முதல் முறையாக 80 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந் தேதியில் இருந்து முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், தங்கள் வீடு தேடி வந்து வாக்கு சேகரிக்கும் தேர்தல் அதிகாரிகள் கொண்டு வரும் வாக்குப்பெட்டிகளில் வாக்குச்சீட்டை பயன்படுத்தி வாக்களித்து வருகிறார்கள்.

    வருகிற 6-ந் தேதி வரை வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 99 ஆயிரத்து 529 பேர் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட விண்ணப்பித்துள்ளனர்.

    அவர்களிடம் இருந்து வாக்குகளை பெறும் பணிக்காக 250 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று வாக்கு பெற்றனர். நேற்று ஒரேநாளில் கர்நாடகத்தில் 11,461 பேர் வீட்டில் இருந்த படியே வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெலகாவி மாவட்டம் சிக்கோடியை சேர்ந்த 103 வயது முதியவரான மகாதேவ மகாலிங்க மாலி என்பவர் வீட்டில் இருந்து வாக்களித்திருந்தார். தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றி அந்த முதியவருக்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது 103 வயதிலும் வீட்டில் இருந்து ஓட்டளித்த அவரை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பாராட்டியதுடன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    அதுபோல் முதியவர் மகாதேவ மகாலிங்க மாலி, தன்னை போன்ற முதியவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க அனுமதி வழங்கிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டையும், நன்றியையும் ராஜீவ்குமாரிடம் பகிர்ந்துகொண்டார். அத்துடன் இந்த நடைமுறை வருவதற்கு முன்பு தான் வீட்டில் இருந்து சிரமத்துடன் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தது பற்றியும், வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் மகாதேவ மகாலிங்க மாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • கர்நாடக காங்கிரஸ் தலைவரின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை இன்று சோதனை நடத்தியது.
    • சோதனையின் போது வீட்டின் மரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் புத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் அசோக் குமார் ராயின் சகோதரர் சுப்ரமணிய ராயின் மைசூரு இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

    தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று நடத்தப்பட்ட சோதனையில் சுப்ரமணிய ராயின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி மரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

     

    தேர்தல் நடத்தல் விதிகள் அமலில் உள்ளதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் இதுவரை ரூ. 110 கோடியை அதிகாரிகள் ரொக்கமாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை 2 ஆயிரத்து 346 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மே 13 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

    • நான் காங்கிரஸ்கட்சிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை.
    • பிரசாரம் செய்தும் எதிர்பார்த்த அளவு எனக்கு அக்கட்சி சார்பில் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன்.

    பெங்களூரு:

    கர்நாடக தேர்தலில் விஜயாப்புரா நகர தொகுதியில் பா.ஜனதா சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னால், காங்கிரஸ் சார்பில் அபிதுல் ஹமீது முஷ்ரிப், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் பத்தேனவாஸ் மகாபரி போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர் பத்தேனவாஸ் மகாபரி திடீரென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், விஜயாப்புரா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு அமைப்பு, நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லை. நான் பிரசாரம் செய்தும் எதிர்பார்த்த அளவு எனக்கு அக்கட்சி சார்பில் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன்.

    நான் காங்கிரஸ்கட்சிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. நான் முழுக்க முழுக்க எனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார்.

    ×